Saturday, March 14, 2009

க‌ற்ப‌னையில் ஒரு நாள்

எல்லையில்லா வான்வெளிக்கப்பால்
நெளிந்தோடும் மேகக் கூட்டங்களில்
ஒரு மின்னலாய் நீ வழிகாட்டுகிறாய்;
உன் நினைவுகள் தந்த சோகங்கள்
என் க‌ண்க‌ளை ஒரிர‌வில் கூட‌
அமைதியாய் மூட‌ விட்ட‌தில்லை;
நீ ம‌ற‌ந்து சென்று விட்டாய்;
என் நினைவுக‌ள் உன் நினைவுக‌ளை
ம‌ற‌க்க‌ ம‌றுத்து விட்ட‌தை ஏனோ
மற‌ந்து சென்று விட்டாய்;
என‌க்கு சொல்ல‌த் தெரிய‌வில்லை;
உன்மேல் குற்ற‌ம் சொல்ல‌ விரும்ப‌வில்லை;
இந்த‌ப் பிரிவு கூட‌ ஒரு வ‌கையில்
என‌க்கு இன்ப‌த்தையே த‌ருகிற‌து;
ஏனெனில், அது கூட‌ நீ கொடுத்த‌த‌ல்ல‌வா..
அந்த‌க் கால‌ங்க‌ளில் உன் ம‌ன‌தை
ஆக்ர‌மித்திருந்த குற்றத்திற்காக‌
இந்த நேரங்களில் உன் நினைவுகள்
என் மனதில் தாக்குதல்
நடத்திக் கொண்டிருக்கின்றன;
உன்னைச் சொல்லியும் குற்றமில்லை;
நம்மிருவர் விழிகளும்
செய்து கொண்ட நிரந்தர ஒப்பந்தம்
உன் இதயத்தில் ஏனோ
ப‌திவு செய்ய‌ப்ப‌டாம‌ல்
போய்விட்டிருக்கிறது.
சில‌ ஊமைக்காய‌ங்க‌ள் ம‌ன‌தை
துன்புறுத்திய‌ போதிலும்
மொத்த‌த்தில் உன் நினைவுக‌ள்
ம‌ன‌துக்கு பெரும் இன்ப‌த்தையே
த‌ந்து கொண்டிருக்கின்ற‌ன‌.
நீயிருந்த‌போது இர‌வு ப‌க‌லாய்
உன் அன்பு என‌க்கு தேவைப்ப‌ட்ட‌து
நீயில்லாத‌ இக்கால‌ங்க‌ளில்
உன் நினைவுக‌ள்
என‌க்கு தேவைப்ப‌டுகின்ற‌ன்;
சுக‌மான இராக‌ங்க‌ளில் சுக‌ம் க‌ண்டிருந்த‌
அந்த‌க் கால‌ங்க‌ளில் உன் பிடிவாத‌த்தை
நான் ப‌ல‌முறை இர‌சித்திருக்கிறேன்;
இன்று அதே பிடிவாத‌த்தால் உன்னை
இழ‌ந்து விட்டிருக்கிறேன்.
இன்ன‌மும் கூட‌ என் ம‌ன‌ நிலையை
மாற்றிக் கொள்ள‌ நான் விரும்ப‌வில்லை;
நான் நானாக‌த்தானிருப்பேன்.
உன் நினைவுக‌ளை ம‌ற‌க்க‌ இய‌ல‌வில்லை;
என் நிலைக‌ளை மாற்ற‌வும் விரும்ப‌வில்லை;
நிர்ம‌ல‌மான‌ இர‌வு நேர‌ங்க‌ளில்
முழு நில‌வின் ஒளியினில்
உன் வ‌ருகைக்காக‌ காத்திருப்பேன்;
நீ வ‌ர‌மாட்டாய்;
வானில் இல்லாத‌ க‌ருமேக‌ங்க‌ள்
என்னித‌ய‌த்தை மூடிக் கொள்ளும்;
உன் சிவ‌ந்த‌ இத‌ழ்க‌ள் என் பெய‌ரை
மெதுவாய் உச்ச‌ரித்த‌ போதினிலே
நான் காற்றிலேறி விண்ணில்
ப‌ற‌ந்திருக்கிறேன்;
உன் மெல்லிய‌ க‌ர‌ங்க‌ள் என் மீது
ப‌ட்ட‌போதெல்லாம் ம‌ண்ணீலேயே
சொர்க்க‌த்தை க‌ண்டிருக்கிறேன்.
நாமிருவ‌ரும் ஒன்றாயிருந்த‌
அந்த‌க் கால‌ங்க‌ளில்,
உட‌லால் ம‌ட்டுமே இருவ‌ராயிருந்தோம்;
உள்ள‌த்தால் அல்ல‌.
இன்று அந்த‌ நினைவுக‌ள் மன‌தில்
விரியும் போதெல்லாம் கூட‌ என‌க்கு
உன்மேல் கோப‌ம் தோன்ற‌வில்லை.
உன‌து சிறு சிறு குறும்புக‌ள்
இன்ப‌மிகு விளையாட்டுக்க‌ள்
துடுக்குத்த‌ன‌ம் த‌வ‌ளும் ம‌ழ‌லைக‌ள்
துள்ளியோடும் குழ‌ந்தைத்த‌ன‌ங்க‌ள்
அம்ம‌ம்மா..
உண்மையிலேயே நான் மிக‌வும்
அதிர்ஷ்ட‌சாலியாய் இருந்திருக்கிறேன்.
சுத்த‌மாக‌ சிறு ச‌ல‌ன‌மின்றி
ஓடிக்கொண்டிருந்த ‌
வாழ்க்கை நீரோட்ட‌த்தில்
நீ ஒரு பெரும் அலையாய் வ‌ந்தாய்;
ஆனால் நீ ம‌ட்டும் வாராம‌லிருந்திருந்தால்
என் வாழ்க்கை நீரோட்ட‌ம்
எப்போதோ வ‌ற்றிப்போயிருக்கும்.
நீயின்றி நான்.. நானின்றி நீ
இது ந‌ம‌து வாழ்க்கையில் இல்லாத‌
வார்த்தைக‌ளாய் ஒரு கால‌த்தில் இருந்த‌து;
இன்று நானின்றி நீ
முடியுமென்று நிருபித்துக் கொண்டிருக்கிறாய்;
என்னால்தான் முடிய‌வில்லை.
உன் ம‌ன‌ம் ச‌ல‌ன‌ம‌ற்ற‌ இர‌வு நேர‌ங்க‌ளில்
என்ன‌ நினைத்துக் கொண்டிருக்கும்..?
வ‌ச‌ந்த‌ கால‌த்தை தோள்க‌ளில் அணைத்து,
தென்ற‌லின் உத‌வியோடு இன்ப‌ இராஜ்ய‌த்தை
ஆட்சி செய்து கொண்டிருந்தோமே..
அதைப் ப‌ற்றியா..?
சுழ‌ன்ற‌டித்த‌ சூறாவ‌ளியில் த‌னித்து நின்று
காப்பாற்றிய‌ என்னைப் ப‌ற்றியா..?
ம‌ல‌ர்ந்து ம‌ண‌ம் ப‌ர‌ப்ப‌விருக்கிற‌
உன் எதிர்கால‌ம் ப‌ற்றியா..?
எதுவானாலும் என் ஆசை ஒன்றுதான்;
நீ என்றுமே ந‌ல‌மாய் வாழ‌ வேண்டும்.
என் சில‌ கால‌ மௌன‌ங்க‌ள் உன‌க்கு
பெரும் புதிராய் இருந்திருக்கும்;
என்ன‌ செய்வ‌து..
என‌து வ‌ட்ட‌த்திற்குள் வீசுவது
தீப்பிழம்புகளானாலும் பெரும் புய‌லானாலும்
வ‌ளைந்து கொடுக்க‌ ம‌ன‌ம் விரும்புவ‌தில்லை.
பிற‌ரின் அன்புக்கு முன்
நாண்லாய் வ‌ளையும் ம‌ன‌ம்
பிற‌ரின் ஆணைக்கு முன்
பெரும் ம‌லையாய் நிலைத்து நிற்கிற‌து.
சுத‌ந்திர‌ம் என்ப‌து ம‌ன‌ம் பூர‌ண‌மாய்
அனுப‌விக்க‌ வேண்டிய‌து..
பிற‌ரின் வ‌ளைவு சுளிவுக‌ளுக்கேற்ப‌
குனிந்து நிமிர்வ‌து இய‌லாத‌ காரிய‌ம்
நீ ஒரு தேவதையாக என் மனதிற்குள்
ஆட்சி செலுத்தினாய்;
உன் சிறகுகளின் இயக்கங்கள்
என்னிடம்தானிருக்கின்றன;
அதனால்தான் இன்னமும் என்னை விட்டு
உன்னால் முழுமையாக
பறந்து செல்ல இயலவில்லை;
உன் மெல்லிய‌ பாத‌ங்க‌ள்
பூமியில் ப‌ட்ட‌த‌ற்காக‌ என் க‌ண்ணீர்
பூமியை சுட்ட‌துண்டு;
உன் ம‌டியில் நான் குழ‌ந்தையான‌ போது
நீ மீட்டிய‌ அந்த‌ வீணையின் ராக‌ங்க‌ள்
ஒரு பொற்கால‌த்திற்கு என்னை
ம‌ன்ன‌னாக்கிய‌துண்டு;
நீ இப்போது கூட‌
என் ம‌ன‌தில்தான் இருக்கிறாய்;
நான்தான் என் ம‌ன‌தை
த‌வ‌ற‌ விட்டுவிட்டேன்.உனக்கு நினைவிருக்கிறதா..?
ஒரு முறை என் விழியில் விழுந்த தூசுக்காக‌
உன் விழிகளில் காவிரியே பெருக்கெடுத்தோடியது;
அந்தப் பெருவெள்ளத்தில் சிக்கி நான்
மூச்சு கூட விடமுடியாமல் தவித்தேன்;
சுகமான அனுபவமல்லவா அது..
சுகம் என்றதும் எனக்கு நினவிற்கு வருகிறது;
உன்னைப் பிரிந்து விட்ட என் விழிகள்
கண்ணிரிலே மிதந்து மிதந்து
கண்ணிரே சுகம் என்றாகி விட்டது;
என்ன செய்ய முடியும்..?
என‌து சுத‌ந்திர‌த்தை காப்பாற்றிக் கொள்ள‌
உன‌து பிரிவைக் கூட‌
ஏற்றுக் கொண்டு விட்டேன்;
ஆனால், உன‌து எண்ண‌ங்க‌ளிலிருந்துதான்
இன்ன்மும் விடுத‌லை கிடைக்க‌வில்லை.
எதையும் ஏற்றுக் கொள்ளும் ம‌ன‌ம்
எதையும் தாங்கிக் கொள்ளும் இத‌ய‌ம்
என‌க்குண்டு என்று ப‌ல‌முறை
பெருமைப்ப‌ட்டுக் கொண்டிருக்கிறேன்;
உன் பிரிவு நிக‌ழாத‌ கால‌ங்க‌ளுக்கு ம‌ட்டுமே
அந்த‌ப் பெருமை உரித்தான‌து என்ப‌தை
இப்போது உண‌ர்ந்து கொண்டேன்;
நீ பிரிந்த‌ போது நான் க‌ண்ணீர் விட‌வில்லை
ஏன் தெரியுமா..?
என் கண்ணீர் கூட‌ உன்னை
குற்ற‌வாளீயாக்க‌க் கூடாது என்ப‌த‌ற்காக‌த்தான்;
எப்போதுமே புன்னகைக்கும்
அந்த சின்ன சின்ன மீன் விழிகள்
நீரில் குளித்தால் என் இதயம் முழுவதிலும்
பெரும் பூகம்பமே உண்டாகிறது.
ஒரு கோடி மாலைக‌ள் தொடுத்து
உன் வ‌ர‌வுக்காக‌ காத்திருந்தேன்;
அத்த‌னையும் வாடி உதிர்ந்து விட்ட‌து;
என் இத‌ய‌ப் புஷ்ப‌ங்க‌ள் ம‌ட்டும்
இன்ன‌மும் வாட‌வில்லை.
என‌க்கு இந்த‌ நேர‌ங்க‌ளில் கூட‌
உன் நினைவுக‌ள்தான்
சாந்திய‌ளித்துக் கொண்டிருக்கின்ற‌ன.
நீ த‌ந்த‌ ம‌ன‌ உறுதியே இன்ன‌மும் என‌க்கு
துணையாய் இருந்து கொண்டிருக்கிற‌து.
நீயில்லாத‌ கார‌ண‌த்தால் ஏற்ப‌ட்ட‌
இந்த‌ துன்ப‌ங்க‌ளை அறிந்த‌ பிற‌கு,
உன்னைப் ப‌ற்றிய‌ ம‌திப்பு
அதிக‌மாக‌வே கூடிவிட்ட‌து.
வ‌ச‌ந்த கால‌ம்,கோடை கால‌ம்,இலையுதிர் கால‌ம்
இப்ப‌டி ப‌ல‌ கால‌ங்க‌ள் மாறி மாறி வ‌ந்து விட்ட‌ன்;
ஆனால், உன் நினைவுக‌ள் ம‌ட்டும் மாற‌வேயில்லை.
ஒசைய‌ற்ற‌ இர‌வு நேர‌ங்க‌ளில் எரியும்
மெழுகுவ‌ர்த்தியாய் உன்னுருவ‌ம் தெரிகிற‌து.
இந்த‌ நிர‌ந்த‌ர்ம‌ற்ற‌ உல‌கில் எது நிர‌ந்த‌ர‌ம்..?
ந‌ம்முற‌வே நிர‌ந்த‌ர‌மில்லாம‌ல் போன‌பின்
இனி எதுதான் நிர‌ந்த‌ர‌மாயிருக்க‌ முடியும்..?
இந்த‌ இத‌ய‌ம் இன‌க்கு கோயிலாயிருக்கும்
நீ வ‌ணங்குவதற்காக அல்ல; குடியிருப்பதற்காக.
என்றொ எங்கோ ஒரு மாலைப்பொழுதில்
உன்னை ச‌ந்திக்க‌ நேர்ந்தால்
உன் உண‌ர்சவுக‌ள் எப்ப‌டியிருக்கும்..?
இனையாக‌ச் செல்லும் த‌ண்ட‌வாள‌ங்க‌ள்
எங்குமே இணையாம‌ல் முடிவ‌து போல‌
ந‌ம் வாழ்க்கையும் முடிந்து விட்ட‌து.
நீ ம‌ட்டும் கொஞ்ச‌ம் சிந்தித்திருந்தால்,
நான் இப்ப‌டி அவ‌ல‌ச் சுவையில்
என் சிந்த‌னையை
செலுத்தியிருக்க‌ வேண்டியிருக்காது.
என்பாட‌ல்க‌ள் உன்னை ப‌ல‌முறை தாலாட்டியுள்ள‌து;
க‌ண‌க்க‌ற்ற‌ முறை உன்னை பாராட்டியுள்ள‌து;
இன்றுதான் க‌ண்ணீரில் நீராட்டிக் கொண்டிருக்கிற‌து.
எத்த‌னையோ ம‌ன‌ச்ச‌ல‌ன‌ங்க‌ள்; ஆனால்,
நீ ஏற்றி வைத்த‌ அன்பு தீப‌ம் அணைய‌வேயில்லை.
உன் ச‌ந்திப்பு ம‌ட்டும் நிக‌ழ்ந்திராவிட்டால்
என் இத‌ய‌த்தில் ஒரு ஆத்ம‌ ப‌ரிசோத‌னை
ந‌ட‌ந்தேறியிருக்காது.
கால‌ச் ச‌க்கர‌த்தின் இறுதிச் சுழ‌ற்சியில் கூட‌,
உன்னை சுற்றி சுழ‌ன்று கொண்டிருக்கும்
என் நினைவுச் சுழ‌ல்க‌ள் ஓய்ந்து விடாது.
உன் எழில் வீசும் புன்ன‌கை;
உன் புன்ன‌கை உண்டாக்கும் க‌விந‌ய‌ம்;
அந்த‌க் க‌விந‌ய‌ங்க‌ள் பாராட்டும் இத‌ழ்த்துடிப்பு;
அந்த‌ இத‌ழ்த் துடிப்பில் தெறிக்கிற‌ தேன்துளிக‌ள்.
அம்ம‌ம்மா..உன்போல‌ ஒருவ‌ர்கூட‌ ம‌ண்ணில்
பிற‌ந்தாரில்லை; இனி பிற‌ப்பாருமில்லை.
நீ எங்கேயோ பிரிந்து சென்று விட்டதாக‌
எண்ணி எண்ணி நான் க‌ண்ணீர் க‌ட‌லில்
குளித்துக் கொண்டிருக்க‌வில்லை;
என‌க்குத் தெரியும்; இன்ன‌மும் நீ
என் நினைவுக‌ளின் எல்லைக‌ளுக்குட்ப‌ட்டுத்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.
இந்த‌ எல்லையில்லாத‌ உல‌க‌ம்; அக‌ண்டு விரிந்த‌ அண்ட‌ம்;
சுக‌மாய் அர‌வ‌ணைக்கும் தென்ற‌ல்
அத்த‌னையும்..என்னும் எத்த‌னையோ அத்த‌னையும்
என‌க்கு ப‌ணிந்து ஏவ‌ல் செய்ய‌ ச‌ம்மதித்தாலும்
என் நினைவுக‌ள் என்ன‌வோ உன‌க்குதான் அடிப‌ணிகின்ற‌ன‌.
இன்னும் எத்த‌னையோ யுக‌ங்க‌ளுக்குப் பிற‌கும்
நாம் ம‌றுப‌டி பிற‌க்க‌ நேர்ந்தாலும்
என்னால் உன்னை க‌ண்டு கொள்ள‌முடியும்.
க‌வ‌லைப்ப‌டாதீர்க‌ள்..
இந்த‌ உல‌க‌ம் ந‌ம் கால‌டியில்தானிருக்கிற‌து
என்று ப‌ல‌முறை என்னைத் தேற்றிய‌
இத‌ழ்க‌ளின் ஸ்வ‌ர‌ங்க‌ளே மாறுப‌ட்டுப் போன‌போது
இத‌ற்கு விடையாக‌ ய‌ரிருக்க‌ முடியும்..?
வான‌த்தில் ஒளித‌ரும் நில‌வில் கூட‌
க‌ள‌ங்க‌ம் காண‌ப்ப‌டும்;
என் வாழ்னவில் ஒளிதந்த‌ உன் வ‌ரையில்தான்
ஒரு க‌ள‌ங்க‌மும் காண‌ப்ப‌ட‌வில்லை.
நீ ஏற்றி வைத்த‌ அந்த‌ அன்பு விள‌க்கு
இன்ன‌மும் அணையாதிருப்ப‌தை
என்றேனும் நீ அறிந்தால் உன் பிர‌திப‌லிப்பு
எப்ப‌டியிருக்கும்..?
மௌன‌ம் அதைதானே நீ சூட்டிக் கொள்வாய்;
என‌க்குத் தெரியும்.
உன்னை முழுமையாக‌ அறிந்த‌வ‌ன்
நான் ஒருவ‌ன்தான்.

No comments:

Post a Comment